திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 2024 பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டம் பொன்மலை பகுதி தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கல்கண்டார் கோட்டையில் நடைபெற்றது. பகுதி செயலாளரும், மாநகராட்சி நகர அமைப்பு குழு தலைவருமான இ.எம். தர்மராஜ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தன்ராஜ் வரவேற்றார். இதில் மாவட்ட தி.மு.க.செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிற்றரசு, மாநகர செயலாளர் மு. மதிவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, வருகிற ஜூன் 3-ம் தேதி முதல் கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு காலம் கொண்டாட வேண்டும். அதே போன்று இந்த நூற்றாண்டு விழாவில் கழகத்தில் மேலும் ஒரு கோடி, உறுப்பினர்களை சேர்க்க கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். ஆகவே உறுப்பினர் சேர்க்கை பணியிலும் தீவிரம் காட்ட வேண்டும். சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் போல பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க வெற்றி தொடர அயராது உழைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் வண்ணை அரங்கநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கே.என். சேகரன், மாவட்ட துணை செயலாளர் லீலா வேலு, பொன்மலை பகுதி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி துணை செயலாளர் காமராஜ் நன்றி கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.