தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்துள்ளது. சட்டசபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் இக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.சி டி பிரபாகர் சபாநாயகராகவும், திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட துறையூர் தொகுதியில் வெற்றி பெற்ற மு.ரவிசங்கர் துணை சபாநாயகர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதல்முறை எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற 41 வயது இளைஞரான ரவிசங்கருக்கு, துணை சபாநாயகராக பொறுப்பு வழங்கப்பட்டதை அரசியல் விமர்சகர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மாற்று அரசியலை முன்னெடுக்கும் விதமாக தமிழக முதல்வர் விஜய் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கும் வகையில், துணை சபாநாயகரான ரவிசங்கரின் அறையில் இவரது நண்பர்களாக அறியப்படும் பார்த்திபன், செந்தில் மற்றும் முரளி ஆகியோர் துணை சபாநாயருக்கான இருக்கையில் அமர்ந்திருப்பது போல வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புகைப்படம் வெளியிட்டதோடு அதற்கு கீழே “டெபுட்டி ஸ்பீக்கர் சேர் இஸ் நவ் அவர் கன்ட்ரோல்” என அதிகாரத்தை வெளிப்படுத்தும் விதமாக பதிவிட்டிருக்கின்றனர். தமிழகத்தில் காலங்காலமாக கோலோட்சியிருந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழக வெற்றிக்கழகத்தை தேர்ந்தெடுங்கள், ஊழலற்ற, நேர்மையான ஆட்சியமைப்பேன் என்பதை முதன்மை முழக்கமாகக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார் கட்சித் தலைவர் விஜய். அதன்பிறகு வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்கும் மேடையில் அவர் பேசியபோது கூட, எனது தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசில் பவர் சென்டர்கள் எல்லாம் கிடையவே கிடையாது. எனது நேரடி கட்டுப்பாட்டில் தான் ஆட்சி நடக்கும் என்று கூறியதோடு, நமது கட்சிதான் ஆட்சிக்கு வந்து விட்டதே, ஒரு ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் நினைத்தால் அதை தற்போதே ஓரம் கட்டி வைத்து விடுங்கள் என, தனது கட்சி தொண்டர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால், கட்சித் தலைவரான விஜய்யின் உத்தரவை காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் துணை சபாநாயகராக ரவிசங்கர் பொறுப்பேற்று சில மணி நேரத்தில் அவரது அறையில் அவருக்கான இருக்கையில் அமர்ந்ததோடு, அதை அதிகாரம் திமிரோடு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டிருப்பது சோசியல் மீடியாவில் தற்போது வைரலாக பரவி வருவதோடு அரசியல் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.

Comments are closed.