தமிழக சட்டமன்ற கூட்டம் இரண்டாவது நாளாக இன்று( மே 12) நடைபெற்றது. சபாநாயகராக ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர், துணை சபாநாயகராக துறையூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்துரை வழங்கினர். சபாநாயகரை வாழ்த்தி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பேரவை தலைவரும், முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரான நானும் ஒரே காலேஜில் படித்தவர்கள். ஒரே கல்லூரியில் படித்து இருந்தாலும் அரசை நடத்துவதில் திமுக தான் சீனியர் பேட்ஜ்.
1967-ம் ஆண்டிலேயே ஆட்சிக்கு வந்தது திமுகதான். நாங்கள் தான் சீனியர்ஸ். அந்த அடிப்படையில் எங்கள் அறிவையும், அனுபவங்களையும் நாங்கள் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருங்கள். தமிழ்நாட்டின் நலன் தான் மிகமிக முக்கியம். பேரவை தலைவர் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறீர்கள். முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரான நானும், அவை முன்னவரும் உங்களை இருக்கையில் அமர வைத்துள்ளோம். இரு தரப்பையும் நீங்கள் தான் அரவணைத்து கோபப்படாமல், கோபப்பட மாட்டீர்கள் என்று தெரியும். உங்களை கோபப்படுத்துவது போல் எந்த செயலையும் நாங்கள் செய்ய மாட்டோம். சட்டமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும், எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும். அதில் தான் அவையின் பெருமை அடங்கி உள்ளது. முந்தைய சட்டசபையை எடுத்துக் கொண்டால் ஆளுங்கட்சி வரிசையில் அதிக உறுப்பினர்களும், எதிர்க்கட்சி வரிசையில் அதை விட குறைவான உறுப்பினர்களும் இருப்பார்கள். ஆனால், இந்த முறை ஆளுங்கட்சிக்கு இணையான எதிர்க்கட்சி வரிசை அமைந்துள்ளது. இதுதான் பேரவையின் கூடுதல் சிறப்பு. மக்களுடைய எண்ணத்தை பிரதிபலிப்பதுபோல் எங்களது பணிகள் நிச்சயம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.