Rock Fort Times
Online News

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை; ஒரே நாளில் தண்ணீர் வடிந்ததற்கு யார் காரணம்? * முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு-எம்.பி துரை வைகோ வார்த்தைப் போர்..!

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15ம் தேதி தொடங்கியது. எல் நினோ காரணமாக இந்த வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். இதனை உறுதி செய்யும் வகையில், கடந்த 17-ம் தேதி இரவு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, சென்னை, பாரிமுனை பகுதியில் ஒரே நாள் இரவில் அதிகபட்சமாக 35 செ.மீ.க்கும் அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியது. இதன் விளைவாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் சென்னை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், அடுத்த நாளே அனைத்து பகுதிகளிலுமே மழைநீர் வடிந்து இயல்புநிலை திரும்பியது. இதற்கு தவெக அரசின் நிர்வாக திறன் தான் காரணம் என ஒருதரப்பினரும், கடந்த 5 ஆண்டுகளாக, திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் தான் காரணம் என்று மற்றொரு தரப்பினரும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கும், எம்.பி துரை வைகோவுக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் நடவடிக்கைகளின் காரணமாக, அண்மையில் பெய்த மழையால் சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனடியாக வெளியேறியது. இதனை நடுநிலையாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் 1,000 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. திருப்புகழ் குழுவின் இடைக்காலப் பரிந்துரைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டது. திருப்புகழ் குழுவின் மீதமுள்ள நீண்டகாலப் பரிந்துரைகளையும், ஏற்கெனவே தொடங்கியுள்ள உட்கட்டமைப்புப் பணிகளையும் தற்போதைய தவெக அரசு தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார். ஆனால், கே.என்.நேருவின் இந்த கருத்தை துரை வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த திமுக ஆட்சியில் ரூ.4000 கோடி செலவில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை முழுமையாக சரியான முறையில் ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதே உண்மை. பல கிலோமீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் வெட்டப்பட்டிருந்தாலும், அவற்றை பிற கால்வாய்களுடன் இணைக்கும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளின் செயல்திறன் குறித்த விரிவான ஆய்வு தேவை. அடுத்த இரண்டு மாதங்களில் பெய்யக்கூடிய மழையின் தாக்கத்தைப் பொறுத்தே சென்னையில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகளின் உண்மையான தன்மையை மதிப்பிட முடியும்” என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்