சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோகன். சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். இவர் கல்லூரி எதிரே உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு இளைஞர்கள் ரோகனை இந்தியில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரோகன் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத ரோகன் கூச்சலிட்டார். உடனே ,அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் துப்பாக்கி வைத்திருந்த இருவரையும் பிடிக்க ஓடி வந்தனர். உடனே இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். இருப்பினும் பொதுமக்கள் விரட்டிச் சென்று அதில் ஒருவரை பிடித்து பூக்கடை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவர் உத்தர பிரதேச மாநிலம் மான்பூர் மாவட்டம் இந்திராகாந்தி நகரைச் சேர்ந்த கஜராஜ் பிரதாப் பால் என்ற ரித்திக்குமார் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், அவர் கொடுத்த தகவலின் பேரில் ரயிலில் தப்பிய அவரது உறவினர் உ.பி. காசியாபாத்தைச் சேர்ந்த அமித்குமாரை விஜயவாடா ரயில் நிலையத்தில் வைத்து அந்தமாநில போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர் சென்னை அழைத்து வரப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் ரித்திக் குமார் வாக்குமூலம் அளிக்கையில், அமித்குமார் அவருடன் உத்தர பிரதேசத்தில் பள்ளியில் ஒற்றாக படித்த ஒரு பெண்ணை 7-ம் வகுப்பு முதல் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியும் அவரிடம் நட்பாக பழகியுள்ளார். தற்போது அந்த மாணவி முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புக்காக சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு சக மாணவரான ரோகனுடன் பழகியுள்ளார். இதுகுறித்த வாட்ஸ்அப் ஸ்டேடஸ் படங்களைப் பார்த்து அமித்குமார் ஆத்திரம் அடைந்தார். மேலும், அவருடன் இருந்த தொடர்பையும் அந்த மாணவி துண்டித்துள்ளார். இதையடுத்து அமித்குமாருக்கு ஆதரவாக அவரது உறவினரான நானும் சேர்ந்து ரோகனை மிரட்டி, அந்த மாணவியைவிட்டு விலகி செல்லுமாறு துப்பாக்கியை காட்டி மிரட்டினோம். இதற்காக கள்ளத் துப்பாக்கி ஒன்றை உத்தர பிரதேசத்திலேயே வாங்கினோம். இரு தினங்களுக்கு முன் சென்னை வந்து, ரோகனை துப்பாக்கி முனையில் மிரட்டினோம் என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.