Rock Fort Times
Online News

பாரதிராஜா உடல் வைக்கப்பட்ட பெட்டி மீது தலை வைத்து கண் கலங்கிய முதல்வர் ஜோசப் விஜய்…!

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற முன்னணி ஹீரோக்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை அனைவரையும் வைத்து படம் இயக்கியவர் பாரதிராஜா. வில்லனாக நடித்து வந்த சத்யராஜை கடலோர கவிதைகள் மூலம் ஹீரோவாக்கி அழகு பார்த்தவர். நடிக்கத் தெரியாதவர்களையும் நடிக்க வைத்தவர். இவரது மகன் மனோஜ். இவரும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அண்மையில் காலமானார். தனது மகன் மீது அதிக பாசம் வைத்திருந்த பாரதிராஜா, மனோஜ் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் மிகுந்த சோகத்தில் இருந்தார். இந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிறிது காலம் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று (ஜூன்10) அவர் காலமானார். அவரது மறைவு தமிழ் திரை உலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் ஜோசப் விஜய் அஞ்சலி,

அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இயக்குநர் பாரதிராஜா இல்லத்திற்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பாரதிராஜா உடல் வைக்கப்பட்டு உள்ள பெட்டியில் தலை வைத்து கண் கலங்கினார். அவரை உடன் இருந்தவர்கள் தேற்றினர். பின்னர் பாரதிராஜா உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர், சிறிது நேரம் அங்கிருந்து விட்டு புறப்பட்டுச் சென்றார். பாரதிராஜா மறைவு குறித்து முதல்வர் ஜோசப் விஜய், வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம்  பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும்  அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா. தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் பாரதிராஜா பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்