Rock Fort Times
Online News

காற்றில் கலந்த காந்தக்குரல்…* இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்..!

பிரபல தமிழ் சினிமா இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று( ஜூன் 10) காலமானார். வயது மூப்பு மற்றும் கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவரை, மருத்துவர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுக்கும்படி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பாரதிராஜா இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 84.

முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர்,

இயக்குநர் பாரதிராஜா கடந்த 1941ம் ஆண்டு, ஜூலை மாதம் 17ம் தேதி, தேனி அல்லிநகரத்தில் மாய தேவர், கருத்தம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு சின்னச்சாமி என்பது இயற்பெயராகும். பள்ளியில் படிக்கும்போதே இலக்கியம், பேச்சுப்போட்டி, மேடை நாடகங்கள் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தினார். ‎தொடர்ந்து, அவரது ஊரிலேயே சிறிது காலம் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு, சினிமாவின் மீது கொண்ட ஈர்ப்பினால் சென்னைக்கு வந்த பாரதிராஜா, திரைத்துறையில் நுழைய பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார். அந்த விடாமுயற்சியின் பலனாக பாரதிராஜாவுக்கு இயக்குநர் புட்டண்ணா கானகல்லிடம் உதவி இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. துடிப்பான உதவி இயக்குநராக இருந்ததால் பாரதிராஜாவுக்கு 1977ம் ஆண்டு ’16 வயதினிலே’ திரைப்படம் மூலம் இயக்குநர் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே தான் யார் என்பதை நிரூபித்து காட்டினார் பாரதிராஜா. அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான படப்பிடிப்புகள் அரங்குகளிலும், ஸ்டூடியோக்களிலும் தான் நடைபெறும். ஆனால் அந்தந்த கதைக்களங்களுக்கு ஏற்ப நேரடியாக கிராமங்களுக்கே சென்று, படப்பிடிப்புகளை நடத்தி ரசிகர்களை வியக்க வைத்தார்.

16 வயதினிலே’ திரைப்படம் பாரதிராஜாவுக்கு மட்டுமல்லாமல் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரது திரைப் பயணத்திலும் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. இயக்குநராக மட்டுமல்லாமல், ஆயுத எழுத்து, திருச்சிற்றம்பலம், ஈஸ்வரன், ராக்கி, நம்ம வீட்டுப் பிள்ளை, பாண்டிய நாடு, மீண்டும் ஒரு மரியாதை, அன்னக்கொடி, ரெட்ட சுழி போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். அவரது மறைவு தமிழ் திரை உலகம் மட்டுமின்றி பிற திரை உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு திரை உலகினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்