Rock Fort Times
Online News

ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது எஃப்.ஐ.ஆர்…!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.3.99 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பெயர் எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு, ரூ.1.10 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர். இதுதொடர்பாக விசாரிக்க நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கின் எப்ஐஆரில் நயினார் நாகேந்திரன் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில் எப்ஐஆரில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதே எப்ஐஆரில், பணத்தை ரயிலில் எடுத்துச் சென்ற சதீஷ் என்பவர் உள்ளிட்ட நால்வரும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து அவருக்கு சொந்தமான பணத்தை நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டுசென்றதாக வாக்குமூலம் அளித்ததாகவும் தகவல் இடம்பெற்றுள்ளது. மேலும், பணம் கொண்டுசெல்லப்பட்ட அந்த நால்வரிடம் இருந்து எம்எல்ஏ அடையாள அட்டை நகல், பாஜக உறுப்பினர்கள் அடையாள அட்டைகளை தேர்தல் பறக்கும்படையினர் கைப்பற்றியுள்ளனர் என்றும் அந்த எப்ஐஆரில் இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்