மாணவர்கள் மீதும், மீனவர்கள் மீதும், தி.மு.க.வுக்கு பாசம் பொங்குவது ஏன்?…
திருச்சியில் சீமான் கேள்வி...!

திருச்சி புத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், “”வென்றாக வேண்டும் தமிழ்” என்ற , தலைப்பில் நேற்று ( 25.08.2023 )மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
தமிழை தனது உயிர் மூச்சாக நேசிக்கும் தமிழன்தான் நம்மை ஆள வேண்டும். மொழி என்பது வெறும் பேச்சுக்காக அல்ல. அது ஒரு தேசத்தின் அடையாளம். திமுக வினருக்கு மீனவர்கள் மீதும், மாணவர்கள், மக்கள் மீதும் திடீர் பாசம் வந்துள்ளது. ஏனென்றால் தேர்தல் வரவுள்ளது. மக்களின் நலன் சார்ந்து சிந்திக்க வேண்டும். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தலை பற்றியே சிந்திக்கிறார்கள். தமிழ் மொழி படித்தால் வேலை இல்லை, ஆங்கிலம் படித்தால் வேலை என்ற நிலையுள்ளது. உலகளவில், ஜெர்மன், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் ஆங்கிலம் பேசுவதில்லை, பேசுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் நாம்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ், அதற்கு ஆதரவு அளித்தது திமுக. ஆனால் இருகட்சிகளுமே நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. அதை நன்றாகப் பயன்படுத்தி கொண்டது பாஜக. நாம் தமிழர் கட்சி, தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போது, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், தாய் மொழியில் பயில்வோர் மற்றும் தமிழ் பெயர்களை வைப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும். கல்வி என்பது மாநில உரிமை, அதை கொடுக்காமல் இருப்பது மத்திய அரசின் தவறு. தேர்தல் வருகிறது, ஆனால் மாறுதல் வரவில்லை. நமது கட்சி எப்போதும் தனித்துதான் போட்டியிடும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹீமாயுன் கபீர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரபு, திருவெறும்பூர் தொகுதி பொறுப்பாளர் மதியழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.