Rock Fort Times
Online News

பிரணவ் ஜூவல்லரிக்கு என்னாச்சு ? புதுச்சேரியில் நகை சீட்டு போட்டவர்கள் குய்யோ… முய்யோ…

அப்ப திருச்சி மக்கள் நிலைமை என்னவாகும் ?

புதுச்சேரி காமராஜர் சாலை ராஜா தியேட்டர் அருகே பிரபல பிரணவ் ஜூவல்லரி என்கிற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. திருச்சி, மதுரை, சென்னை, நாகர்கோவில், ஈரோடு, கோயமுத்தூர், கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக் கடைக்கு நடிகைகள் ராதிகா, சைத்ரா ரெட்டி மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் விளம்பர தூதுவர்களாக உள்ளனா்.
புதுச்சேரியில் இந்த நகைக்கடை திறக்கப்பட்டு ஒரு ஆண்டுதான் ஆகிறது. இக்கடையில் நகைச் சீட்டு போட்டால் 12 மாதத்திற்கு 9 சதவீத போனஸ் மற்றும் வாங்கும் நகைகளுக்கு 9 முதல் 12 மாதங்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டது.இதனை நம்பிய அப்பாவி வாடிக்கையாளர்கள் பலரும் பிரணவ் ஜூவல்லரி நகை சீட்டில் சேர்ந்தனர். இந்த நிலையில் நகை சீட்டில் சேர்ந்த சிலர் அதற்குரிய காலம் முடிவடைந்ததால் நகையை வாங்க கடைக்கு வந்துள்ளனர். இன்னும் சிலர் 12 மாதத்திற்கு முன்பாகவே சீட்டை முடித்துவிட்டு நகையை வாங்க வந்தனர். ஆனால் அவர்களுக்கு நகையை வழங்காமல், கடந்த சில நாட்களாகவே கடை ஊழியர்கள் அலைக்கழித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி வியாழக்கிழமை மாலை 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் புதுச்சோி பிரணவ் ஜூவல்லரி நகை கடைக்கு வந்தனர்.ஆனால் கடையில் தங்க நகைகள் எதுவும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்கள் மட்டுமே இருந்தன. இதனால் சீட்டு பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் நகையை உடனே தரக்கூறி பிரணவ் ஜூவல்லரி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நகை இல்லாவிட்டால் அதற்குரிய பணத்தை தரவேண்டும் என வாடிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு கடை ஊழியர்கள் சரிவர பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கடை மேலாளருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரணவ் ஜூவல்லரி கடை எதிரே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த புதுச்சேரி, பெரியகடை சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து வாடிக்கையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதன் காரணமாக மறியலை கைவிட்டு, போலீஸ் நிலையைத்தில் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்குமாறு கூறினர். அதன்படி வாடிக்கையாளர்கள் சிலர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் சிலர், பிரணவ் ஜூவல்லரி நகை கடையில் இருந்த வெள்ளி பொருட்களை, நகை சீட்டு செலுத்திய பணத்திற்கு ஈடாக வாங்கி சென்றனர்.

புதுச்சேரி பிரணவ் ஜூவல்லரியில் ஏற்ப்பட்ட இப்பிரச்சனையால் அந்நிறுவனத்தில் நகைசீட்டு போட்ட, சென்னை, மதுரை, ஈரோடு, கோயமுத்தூர் ,கும்பகோணம், நாகர்கோவில் மற்றும் திருச்சி ஆகிய ஊர்களை சேர்ந்த அப்பாவி வாடிக்கையாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். மேலும் பிரணவ் ஜூவல்லரி நிறுவனம் ஏகப்பட்ட பொதுமக்களிடமிருந்து மாத வட்டி தருகிறேன் என கூறி கோடிக்கணக்கான தொகை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறிய அளவிலான நகைசீட்டு பணத்தையே திருப்பி தரமுடியாத பிரணவ் ஜூவல்லரி, தான் வசூல் செய்த பெரிய அளவிலான பொதுமக்கள் டெபாசிட் பணத்தை எப்படி திருப்பி தருவார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்