Rock Fort Times
Online News

மணப்பாறையில் திமுக பிரமுகர் அதிரடி கைது: ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…!(வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள முத்தப்புடையான் பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சிலர் மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல்கள் சென்றன. அந்த தகவல்களின் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு மணல் மாபியா கும்பல் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணலை அள்ளி டிப்பர் லாரிகளில் ஏற்றி கடத்த முயன்றது தெரிய வந்தது. போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். பின்னர், மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு ஜேசிபி இயந்திரம் மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், 3 வாகனங்களின் ஓட்டுனர்களையும் பிடித்து மணப்பாறை காவல்நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.

இவர் மணல் கடத்தல் மட்டுமின்றி அரசு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வருவதாகவும், டிராவல்ஸ் கம்பெனி வைத்து நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆரோக்கிய சாமியை இன்று (ஏப்.25) போலீசார் கைது செய்து மணப்பாறை காவல் நிலையத்தில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் விரைந்து வந்து மணப்பாறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், கட்சி பிரமுகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆரோக்கியசாமி மணல் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டாரா? அல்லது சட்டமன்றத் தேர்தலின் போது பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டாரா? காவல்துறை உயர் அதிகாரியை ஒருமையில் திட்டியதால் கைது செய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்