தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களுக்கு மின் தேவை எவ்வளவு என்ற விவரங்களை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த (2025) ஆண்டு மார்ச் மாதத்துடன் இந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிட்டு இந்த மின் தேவை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென் மாநிலங்களின் தினசரி மின் தேவை 69 ஆயிரத்து 934 மெகாவாட்டில் இருந்து 73 ஆயிரத்து 805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் மின் தேவை 19 ஆயிரத்து 679 மெகாவாட்டில் இருந்து 19 ஆயிரத்து 822 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. அதாவது, தென் மாநிலங்களிலேயே மின் தேவையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தின் மின் தேவை தினமும் சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது கோடை காலத்தில் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 21-ந் தேதி நிலவரப்படி, தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சம் தொட்டு 21 ஆயிரத்து 60 மெகாவாட்டாக இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மாதம் (மே) முதல் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “மின் தேவை எவ்வளவு இருக்கும், எவ்வளவு மின்சாரம் கிடைக்கும், பற்றாக்குறை எவ்வளவு ஏற்படும் என்பதை முன்கூட்டியே மதிப்பீடு செய்து பற்றாக்குறையை சமாளிக்க, மின் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Comments are closed.