திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது, காந்திபுரம். இங்கு சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் துறையூர், உப்பிலியபுரம், சோபனபுரம் ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும், திருச்சி, பெரம்பலூர் ஆகிய பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர். தினமும் பத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் குழந்தைகளை ஏற்றி செல்வதற்கு காலை, மாலை என இரு நேரம் வந்து செல்கின்றன. இங்குள்ள சாலையானது, சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு மிகவும் பழுதடைந்து உள்ளது. இதன் காரணமாக இந்த சாலையில் பகல் நேரங்களில் தட்டு தடுமாறி தான் செல்ல வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் பலர் தடுமாறி கீழே விழுந்து ரத்த காயம் அடைகின்றனர். விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை எடுத்து செல்வதற்கும், பால் மற்றும் அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்வதற்கும் மிகவும் சிரமப்படுன்றனர். நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் இங்கிருந்து உப்பிலியபுரம் அல்லது துறையூர் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இருசக்கர வாகனத்தில் கூட அவர்களை அழைத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே, பழுதடைந்த இந்த சாலையை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.