தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல, சென்னை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று( ஏப்.14) காலை வெளியிட்டார். இந்த நிகழ்வில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* தேர்தலில் வெற்றி பெற்றவுடன் குடும்பத்துக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும்.
* மகளிர்க்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்.
* பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி பண்டிகைக்கு தலா ஒரு சிலிண்டர் வீதம் மொத்தம் 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
பெண்கள் இரு சக்கர மின் வாகனம் வாங்க ரூ. 25,000 மானியம் வழங்கப்படும்.
* தைப்பூசம் மாநில விழாவாக கொண்டாடப்படும்.
* திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
* பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காகத் தடையற்ற ‘ஜீரோ-எப்ஐஆர்’ பதிவுமுறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்ஸோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் ‘நிர்பயா’ நிதியை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.
* போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய ‘தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ உருவாக்கப்படும்.
* தமிழ்நாட்டின் 10 நகரங்களை தேசத்தின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம்.
முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ₹15 லட்சம் வரை வட்டியில்லா கடன், ஜிஎஸ்டி தொடர்பான சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும். இதேபோல மேலும் சில அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

Comments are closed.