திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் ஆதி மாரியம்மன் கோவில் உள்ளது. சமயபுரம் கோவிலில் அம்மன் எழுந்தருளுவதற்கு முன்பு இனாம் சமயபுரத்தில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால், இக்கோவில் ஆதி மாரியம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது. சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் கடந்த மாதம் 11ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் திருவிழா தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 26ம் தேதி மாசித் தேர்த் திருவிழா தொடங்கியது. இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் சிம்மம், யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாசி தேரோட்ட விழா இன்று(03-03-2024) நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள், குருக்கள், பக்த பிரமுகர்கள் செய்திருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.