மாற்றி எடுத்துச் செல்லப்பட்ட சூட்கேஸ்: ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை மீட்டு ஒப்படைத்த திருச்சி இரயில்வே போலீசாருக்கு பாராட்டு…!
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கே.பி.செபாஸ்டியன் தலைமையில் குருநாதன், துணை உதவி ஆய்வாளர், லட்சுமணன், துணை உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்சி வந்தடைந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த இரண்டு பயணிகள் தங்களது சூட்கேஸ்களை மாற்றி எடுத்துச் சென்று விட்டனர். அதில் ஒரு பயணியின் சூட்கேசில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் மற்றும் பட்டு புடவைகள் இருப்பதாக ரோந்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக ரோந்து போலீசார் விசாரணை நடத்தி சூட்கேஸ்களை மாற்றி எடுத்துச் சென்ற சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் காசிநாதன் மற்றும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான ராஜகோபாலன் ஆகியோரை கண்டறிந்து திருச்சி ரயில்வே போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த சூட்கேஸ் அவரவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட ராஜகோபாலன் அதனை திறந்து பார்த்தபோது ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பட்டுப் புடவைகள் அப்படியே இருந்தன. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த ரயில்வே போலீசாருக்கும், சூட்கேஸ் ஐ முறையாக ஒப்படைத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிக்கும், ராஜகோபாலன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Comments are closed.