திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மின்கம்பியில் உரசிய டிப்பர் லாரி! டீசல் டேங்க் வெடித்து சிதறியதால் பரபரப்பு…
திருச்சி மாநகரில் வீடுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை, பஞ்சப்பூர் அருகே பசுமை பூங்காவில் உள்ள தற்காலிக குப்பை கிடங்கில், கொட்ட முயற்சிக்கும்போது, மின்கம்பியின் மீது குப்பை லாரி உரசியது. இதனால் தீப்பற்றியதில் குப்பைலாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியிலுள்ள பசுமை பூங்காவில், நுண் உர செயலாக்க மையமும், தற்காலிக குப்பைக்கிடங்கும் செயல்பட்டுவருகிறது. திருச்சி மாநகரில் இன்று வீடுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை, பசுமை பூங்காவில் உள்ள நுண்உர செயலாக்கம் மையத்திற்கு டிப்பர் லாரியில் கொண்டுவந்துள்ளனர். அங்கு குப்பைகளை கொட்ட முற்பட்டபோது மேலே இருந்த மின்கம்பியில் உரசியதில் டிப்பர் லாரி தீப்பற்றி எரியத்தொடங்கியது. அதன்பின்னர் லாரியின் டீசல் டேங்க் வெடித்து சிதறியது. இந்நிலையில் நுண்ணுயிர் உர செயலாக்க மையத்தில் பணியில் இருந்த மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஓட்டம்பிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள்ளாக டிப்பர் லாரி முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாக மாறியது. இந்த தீ விபத்தில் லாரி டிரைவர் மற்றும் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.
Comments are closed.