தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதுதொடர்பாக சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் கட்சித் தலைவர் விஜய் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். முன்னதாக, முதல்வருக்கு இணையான பாதுகாப்புடன் அலுவலகம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தவெக கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில், தவெக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான உறுதிமொழிப் பத்திரத்தில் அனைத்து வெற்றி வேட்பாளர்களும் கையெழுத்திட்டனர். இதற்கிடையே, ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ள கடிதத்தில், நாளை (மே 7) பதவியேற்க தயாராக உள்ளதாகவும், 2 வார காலத்துக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் அதில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநரை இன்று சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார். அப்போது, ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார். ஆளுநர் அழைப்பு விடுக்கும்பட்சத்தில், முதல்வராக விஜய் நாளை பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி, தவெக வெற்றி வேட்பாளர்கள் அனைவரும் மாமல்லபுரம் அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.