தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் 23 அன்று அறிவித்தார்.
இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9 மணி முதல், மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும் அன்றையதினம், மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். அதன்படி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்கிற திட்டத்தின்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அயன்புத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சென்ற கலெக்டர், அங்கு காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்தார். உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்த ஆட்சியர், மாணவர்களோடு அமர்ந்து சாப்பிட்டார்.
Comments are closed.