தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் கொளுத்தி வருகிறது. திருச்சியில் நேற்றைய தினம் 105 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவானது. இதனால் வாகன ஓட்டிகள், தொழிலாளர்கள், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று (மே 2 )முதல் மே 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு ராஜஸ்தான் முதல் குமரிக்கடல் வரை, கிழக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலுங்கானா ராயலசீமா மற்றும் உள்தமிழகம் வழியாக, சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மே 2, 3 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 4, 5, 6 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 7ம் தேதி ஓரிரு இடங்களிலும், 8-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, இன்று திருச்சியில் மாலை 5-30 மணி அளவில் கோடை மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதன் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திருச்சியில் வெப்பம் நீடித்த நிலையில் இந்த மழையால் பூமி குளிர்ந்து இதமான சூழ்நிலை நிலவியது.

Comments are closed.