Rock Fort Times
Online News

கட்டுமான நிறுவனங்களில் 3-வது நாளாக தொடரும் சோதனை..!

தமிழகத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்கள் வருமான வரியை முறையாக செலுத்தாமல் குறைத்து கட்டியதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை மூன்றாவது நாளாக இன்றும்(4-1-2024) நீடித்தது. சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதே போல் பிரபல கட்டுமான நிறுவனமான சிஎம்கே நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஒப்பந்தம் எடுத்து கட்டி கொடுத்துள்ளது. ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. சென்னை அண்ணாநகர் ஏகே பிளாக் 10வது மெயின் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதேபோல,
கோவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை எலன் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் விக்னேஷ் என்பவரது இல்லத்திலும், கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள கிரீன் பீல்டு ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. கருமத்தம்பட்டி மற்றும் கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், இதேபோல் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது. சென்னையில் அண்ணாநகர், ஷெனாய் நகர், எழும்பூர் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், கோவையில் மூன்றாவது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமான தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து ஐடி சோதனை நடைபெற்று வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்