Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள தெருவோர கடைகள் முறைப்படுத்தப்படும்- மேயர் அன்பழகன்….

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று(3-1-2024) நடைபெற்றது. துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன் , ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி துணை ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டம் தொடங்கியவுடன் மேயர் பேசுகையில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் புயல் வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் விரைந்து சென்று அங்கு பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தனர். திருச்சி மாநகராட்சி சார்பில் ஊழியர்களின் ஒரு மாதம் ஊதியம் ரூ.2 கோடியே 48 லட்சம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளோம். அதேபோல திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்களின் ஒரு மாத ஊதியம் ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்தை மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒப்புதலோடு வழங்க இருக்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு பொதுமக்களுக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை திருச்சி மாநகராட்சி சார்பில் வழங்கி உள்ளோம். வெள்ள பாதித்த மக்களுக்கு உரிய உதவிகளை செய்த மாநகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.பின்னர் மாமன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-
செந்தில்நாதன் (அமமுக):–
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் பகுதியை சுற்றி காய்கறிகள் கடைகள் போடப்பட்டு உள்ளது .இதனை யார் டெண்டர் எடுத்து உள்ளார்கள். தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ளது. எனவே அங்குள்ள காய்கறி கடைகளை மாநகராட்சி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து செல்வம் (திமுக): -பொதுவாக தரைக்கடைகள் வியாபாரம் செய்பவர்களை மாநகராட்சி சார்பில் பட்டியலிட்டு அவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்தால் நன்றாக இருக்கும்.
அம்பிகாபதி (அதிமுக):திருச்சி வயர்லெஸ் ரோடு பகுதியில் உள்ள வீடுகளை விற்கவோ, வாங்கவோ பத்திரப்பதிவு செய்ய முடியாமல் இருக்கிறது.
மேயர் அன்பழகன்:- இது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவிந்தராஜ் (காங்): எனது வார்டில் பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபாகரன் (விசிக):–
எனது வார்டில் இருக்கும் இ.பி. ரோடு சாலையின் இரு பக்கங்களிலும் கனரக வாகனங்கள நிறுத்தி வைக்கப்படுகிறது. மூன்று மாதத்திற்கு முன்பு ஒருவர் விபத்தில் இறந்தார். இன்று காலை அங்குள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி குழந்தை விழுந்து படுகாயம் அடைந்தது. லாரிகளை அகற்றி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயஸ் (மனித நேய மக்கள் கட்சி):
ரூ. 20 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் அமைக்க நிதி ஒதுக்கிய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமதாஸ் (திமுக):
மூன்று பேரை நாய் கடித்துள்ளது. நாய் பிரச்சினைக்கு மாற்று வழியை காண வேண்டும்.
மேயர்:
8,693 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பாலக்கரை பகுதியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்ட பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நாய்கள் இறக்கும் பட்சத்தில் அதனை எந்திரம் மூலம் எரித்து உரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
ஜவகர்(காங்.):
கொள்ளிடம் ஆற்றில் உள்ள மாநகராட்சி நீரேற்று நிலையத்தில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் தண்ணீர் கலங்கலாக வருகிறது. ஆகவே குடிநீருக்கு முக்கொம்புலிருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் கலைச்செல்வி:
எனது வார்டில் வில்லியம்ஸ் சாலையில் ஏராளமான சாலையோர பிரியாணி கடைகள் இருக்கிறது.இதனால் மாநகராட்சிக்கு எந்த வருவாயும் வரவில்லை.
மேயர்:
ஆணையர் வந்த பின்னர் தெருவோர கடைகள் முறைப்படுத்தப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

1 Comment
  1. https://md.chaosdorf.de/

    திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள தெருவோர கடைகள் முறைப்படுத்தப்படும்- மேயர் அன்பழகன்…. – Rockfort…

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்