Rock Fort Times
Online News

“தனது குழந்தையை கொசு கடிக்கிறது”- குவைத்தில் இருந்து தஞ்சை மாநகராட்சிக்கு இ-மெயில் மூலம் தந்தை புகார்…

தஞ்சை மாநகராட்சி பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக மாலை 5 மணி முதல் கொசு தொந்தரவால் மக்கள் கடும் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. கொசுவை ஒழிக்க மாநகராட்சி சார்பில் கொசுமருந்தும் அடிக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க தஞ்சை மாநகராட்சிக்கு இ-மெயில் மூலம் குவைத்தில் இருந்து ஒரு உருக்கமான கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் நான் காதர்உசேன் . 30-வது வார்டு சின்ன அரிசிக்காரத்தெருவை சேர்ந்தவர், தற்போது குவைத்தில் வேலை செய்து வருவதாக கூறி உள்ளார். மேலும், சின்னஅரிசிக்காரத்தெருவில் வசிக்கும் தனது 6 மாத கைக்குழந்தையான அன்பு மகளை கொசு கடிப்பதாகவும், கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இருந்தார். இதையடுத்து மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, சுகாதார ஆய்வாளர்களை அழைத்து கடிதத்தில் தெரிவித்த பகுதிக்கு சென்று உடனடியாக கொசுமருந்து அடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சுகாதார ஊழியர்கள் சின்ன அரிசிக்காரத்தெருவுக்கு சென்று அந்த பகுதி முழுவதும் கொசுமருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி எடுத்த நடவடிக்கை குறித்து காதர்உசேனுக்கு, கொசுமருந்து அடிக்கும் புகைப்படத்தையும், கொசுமருந்து அடித்து விட்டு அந்த குழந்தையின் புகைப்படத்தையும் எடுத்து பதிவிட்டனர். இதையடுத்து தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்த காதர் உசேன் இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பினார். மேலும் தனது முகநூல் பக்கத்திலும் இதுதொடர்பாக பதிவிட்டு நன்றியை தெரிவித்துள்ளார். 6 மாத குழந்தையின் மூலம் அப்பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்