நீலகிரி மாவட்டம் உதகையில் கட்டுமான பணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உரிய அனுமதியின்றி நடைபெறும் இதுபோன்ற கட்டுமான பணிகளின்போது, அவ்வப்போது நிலச்சரிவுகள் ஏற்பட்டு பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உதகையை அடுத்த லவ்டேல் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் புதிய வீட்டிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. அந்த வீட்டுக்கான கழிவறை அமைக்கும் பணியில் 7 பெண்கள் உட்பட 8 கட்டிட தொழிலாளர்கள் இன்று (07-02-2024) ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கழிவறைக்காக தோண்டப்பட்ட குழியின் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதில், 8 பேரும் மண்ணில் உயிருடன் புதைந்தனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மண்சரிவில் சிக்கிய 8 பேரையும் மீட்டனர். இருப்பினும் இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேரில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மண்ணில் புதைந்ததில் சங்கீதா (35), சகீலா (36), பாக்கியா (36), உமா (35), முத்துலட்சுமி (35) ஆகியோர் உயிரிழந்தனர். மற்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் உதகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.