பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து உழைக்கும்போது சிறந்த சமுதாயம் உருவாகும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
பள்ளிக்கல்வித் துறையின் தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் திருச்சி மண்டல மாநாடு அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று(07-02-2024) நடைபெற்றது. தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். மாநாட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி பேசினார். மாநாட்டில் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அறிவொளி நோக்க உரை ஆற்றினார். மாநாட்டில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்கக இயக்குனர் நாகராஜ முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாநாட்டை தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் உள்ள பள்ளி கல்வி துறையில் முதன்மையான பள்ளி கல்வி துறையாக இருப்பது தமிழ்நாடு பள்ளி கல்வி துறை தான். பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து உழைக்கும் போது சிறந்த சமுதாயம் உருவாகும் என்றார். மாநாட்டில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் நன்கொடையாளர்கள் மற்றும் மாநாடு சிறக்க பணியாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். முடிவில், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா நன்றி கூறினார். முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்வி சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாநாட்டில் திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர், மண்டல தலைவர் மதிவாணன், திருச்சி மண்டலத்தை சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.