Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா- இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் ஆய்வு..(வீடியோ இணைப்பு)

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து. ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டக நிகழ்ச்சியுடன் கடந்த 12ம் தேதி தொடங்குகியது.

பகல்பத்து உற்சவத்தின் 13-ந்தேதி துவங்கி இன்று பகல் பத்து ஆறாம் திருநாள் நடைபெறுகிறது. பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இரவு 7 மணிக்கு அர்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்தின் முதல் நாள் முதல் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (22-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

23-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 29-ந் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும். 30-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.

சொர்க்கவாசல் திறப்பு தினமான 23-ந் தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான 29-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 30-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.  இவ்விழாவின் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையின் திருப்பணிகள் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், திருச்சிராப்பள்ளி மண்டல இணை ஆணையர் / தக்கார் பிரகாஷ், தஞ்சை மண்டல இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர்கள் இரவிச்சந்திரன், ஹரிஹரசுப்ரமணியன் , லட்சுமணன், தலமை பொறியாளர் பெரியசாமி , தலமையிடத்து செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனா்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்