Rock Fort Times
Online News

கட்சித் தாவல் புகார் உள்ள நிலையில் ராஜினாமாவை ஏற்றது ஏன்?- இபிஎஸ் தரப்பு கேள்வி…!

சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதனிடையே,  தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா, மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயகுமார் ஆகியோர் நேற்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே இந்த மூன்று எம்எல்ஏக்களும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, குதிரை பேரம் நடத்தி எம்.எல்.ஏக்களை தவெக தங்கள் கட்சியில் இணைத்துள்ளதாகவும், இந்த சதி நாடகத்திற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என்றும் திமுகவும், அதிமுகவும் கடுமையாக தவெக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று (26-05-2026) சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்துப் பேசினர். கட்சி மாறி வாக்களித்ததாக புகாருக்கு உள்ளானவர்களின் ராஜினாமாவை எப்படி ஏற்கலாம்? எனவும் விலகல் கடிதம் அளித்த 3 பேர் மீதும் அரசியலமைப்பின் படி பதவிநீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளது என்றும், அதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேரின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முறையிட்டு கடிதம் வழங்கினர். அதனைதொடர்ந்து அவர்கள் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், “25 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்திருக்கிறார். அந்த கடிதம் பேரவை தலைவரின் பரிசீலனையில் உள்ளது. இதற்கிடையில் தங்கள் மீது கட்சி தடைத்தாவல் தடை சட்டம் பாய்ந்துவிடுமோ என்ற ஒரு அச்சத்தின் காரணமாக மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவை தலைவரிடம் கடிதம் தருகிறார்கள். ஏற்கனவே அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடிதத்தின் மீது ஆய்வு இருக்கின்ற போது, அவர்களுடைய ராஜினாமா கடிதத்தை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது விதிகளுக்கு முரணானது, சட்டத்திற்கு முரணானது இதை ஏற்றுக் கொள்ள கூடாது. அதை எங்களுடைய கோரிக்கையாக வைத்து மனு கொடுத்திருக்கிறோம். ராஜினாமா செய்த 5 நிமிடத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட லேமினேஷன் அட்டையுடன் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குகிறார்கள். இது தலைமைச் செயலகமா? அல்லது தவெக கட்சியினுடைய தலைமை நிலையமா? என்று எங்களுக்கு புரியவில்லை. இந்த அரசு குதிரை பேரத்தை குதிரை வேகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது” என்று கூறினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்