தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்தநிலையில் அமைச்சர்கள், த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு மருத்துவமனைகள், கல்குவாரிகள், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், கட்சி நிர்வாகிகள் ஆய்வு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் வேலூர் மாவட்டம், கணியம்பாடி தவெக கிழக்கு ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உள்ளிட்டோர் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, கடந்த 22-ம் தேதி செங்கல் சூளை பகுதிக்குச் சென்றிருந்த த.வெ.க ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. அன்றைய தினமே, த.வெ.க நிர்வாகிகள் மீது செங்கல்சூளை உரிமையாளர்கள் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பதிலுக்கு த.வெ. க.வினர், இந்தப் பகுதியில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடைபெறுகிறது. இதனை தடுக்கவே நாங்கள் முயன்றோம், மாமூல் எதுவும் கேட்கவில்லை என புகார் அளித்தனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. செங்கல்சூளை உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த, விவகாரம் தொடர்பாக கணியம்பாடி த.வெ.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி த.வெ.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
தவெகவினர் தலையிடுதல் கூடாது,
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடுதல் கூடாது. தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து தவெகவினர் செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர், அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுதலோ. ஆய்வுகள் மேற்கொள்ளுதலோ கூடாது. பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எவ்வித இடையூறும் இன்றி கண்ணியத்துடன் செயல்பட வேண்டும். கட்சியின் பெயரையோ அல்லது கட்சி பதவிகளையோ பயன்படுத்தி எவரும் தன்னிச்சையான அதிகார மையங்களாக செயல்பட கூடாது. குறிப்பாக அரசு அலுவலகங்கள். காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்சியின் மாண்பை குலைக்கும் வகையில் எவ்வித செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என கட்சி தலைமை வலியுறுத்தி உள்ளது.

Comments are closed.