தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ம் தேதி நடைபெற்ற நிலையில், அதிமுகவை சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், இந்த 25 பேர் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவியை பறிக்க வேண்டும் என சபாநாயகரிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதேபோன்று அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் சார்பிலும் இபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் வழங்கப்பட்டிருந்தது. இந்த கடிதங்கள் சபாநாயகரின் பரிசீலனையில் இருந்து வரும் நிலையில், அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்களான மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்திய பாமா ஆகியோர் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
தொடர்ந்து அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று(மே 26) ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து மதியம் 4 மணி அளவில் பனையூர் தவெக அலுவலகத்தில் என்.ஆனந்த் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்தகட்டமாக ராஜினாமாவை அரசிதழில் பதிவு செய்வோம்” என்றார்.

Comments are closed.