Rock Fort Times
Online News

ரிசர்வேஷன் செய்யப்பட்ட பெட்டியில் அமர்ந்ததால் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்சாரம் துண்டிப்பு…* பயணிகள் வாக்குவாதம்…!(வீடியோ இணைப்பு)

கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் மன்னார்குடியில் இருந்து தினமும் இரவு 8-25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும். இந்த ரயிலின் ரிசர்வேஷன் செய்யப்பட்ட பெட்டி ஒன்றை, பொதுப் பெட்டி என நினைத்து நூற்றுக்கணக்கான பயணிகள் அதில் ஏறி அமர்ந்தனர். ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள், இது ரிசர்வேஷன் பெட்டி, ரிசர்வேஷன் செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்று கூறி, அதில் அமர்ந்திருந்தவர்களை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். ஆனால், பயணிகள் அங்கிருந்து வெளியேற மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரயில்வே நிர்வாகத்தினர், அந்த குறிப்பிட்ட பெட்டிக்கான மின் இணைப்பை அதிரடியாகத் துண்டித்தனர். இதன் காரணமாக மின்விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள் இல்லாமல் கடும் இருளில் மூழ்கியபடி, பாதுகாப்பற்ற முறையில் பயணிகள் பயணிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். அந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்தை வந்தவுடன் காவல்துறையினர் ஏற்கனவே முன்பதிவில்லாத பெட்டியில் அமர்ந்திருக்கும் பயணிகளை கீழே இறங்க சொன்ன போது அப்போதும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் சென்று ஊட்டியில் நடைபெறும் சாரண, சாரணியர் முகாமிற்கு 80 மாணவர்கள் இந்த பெட்டியில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பதிவு செய்திருந்தனர். ரிசர்வேஷன் பெட்டியை காலி செய்து கொடுக்காததால் அவர்கள் நடைமேடையில் தவித்தனர். ரயில் புறப்பட தயாரானதால் 80 மாணவர்களும் சாரண சாரணியர் அலுவலர்களும் கடைசி நேரத்தில் கீழே அமர்ந்தும், படிக்கட்டுகளில் அமர்ந்தும் பயணம் செய்தனர்.

ரயில்வே அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் முன்பதிவு செய்த சாரண சாரணியர் மாணவர்கள் இரவில் ரயில் பெட்டியில் கீழே அமர்ந்து பயணம் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி என்ற முறையான அறிவிப்பு இல்லாததே இந்த குழப்பத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இனி இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்