முசிறி பெண் டிஎஸ்பி புகார்: சவுக்கு சங்கர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்- பெண்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு…!
தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில், நேரடியாக தேர்வு செய்யப்பட்டு தற்போது முசிறி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் யாஸ்மின், திருச்சி மாவட்டம் சைபர் கிரைம் போலீசில் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தார்.

அதன்பேரில், சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடமும் பெண் காவலர்கள் பலர், சவுக்கு சங்கர் மீது புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சவுக்கு சங்கரை கோவையில் இருந்து அழைத்து வந்து திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் இன்று(15-05-2024) ஆஜர் படுத்தினர். சவுக்கு சங்கர் திருச்சி அழைத்து வரப்பட்டதை ஒட்டி நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக சவுக்கு சங்கரை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்த போது அவருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட பெண்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.