சென்னையிலிருந்து புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (10-07-2024) திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த ஒரு பையில் கத்தை, கத்தையாக ரூபாய் நோட்டுகளும், ஏராளமான தங்க நகைகளும் இருந்தன. இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் லட்சுமணன் என்பதும், மதுரையில் உள்ள ஒரு நகை கடையில் பணியாற்றி வருவதாகவும், அந்த கடைக்கு சென்னையிலிருந்து தங்க நகைகள் மற்றும் பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதுகுறித்து, வணிகவரித்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் வணிகவரித்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது லட்சுமணன், தான் கொண்டு வந்த ஆவணங்களை அவர்களிடம் கொடுத்தார். அந்த ஆவணங்களை சரிபார்த்த போது அவை அனைத்தும் போலியானது என தெரிய வந்தது. அதன்பேரில், பணம் மற்றும் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து மதிப்பிட்டனர். ரூபாய் நோட்டுகளை எண்ணிப் பார்த்தபோது 15 லட்சம் இருந்தது. 1.89 கோடி ரூபாய் மதிப்புள்ள 2795 கிராம் தங்க நகைகள் இருந்தன. இதுதொடர்பாக லட்சுமணனிடம், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் கட்டு, கட்டாக பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1
of 841
Comments are closed.