திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் இரு தரப்பினர் இடையே மோதல்: வாலிபர் கொலை வழக்கில் 11 பேர் அதிரடி கைது…!
திருச்சி, ஸ்ரீரங்கம் திருவளர்சோலை பகுதியில் சம்பவத்தன்று இரவு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நெப்போலியன் (29) என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். மேலும், இந்த மோதலில் கதிரவன் (40), சங்கர் குரு (37), கமலேஷ், (20), ஜீவானந்தம் ஆகியோருக்கு கத்திக்குத்து காயங்களும், 6 பேருக்கு ரத்தக் காயங்களும் ஏற்பட்டன. காயமடைந்தவர்கள் திருச்சி மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நெப்போலியன் உடலை வாங்க மறுத்து ஸ்ரீரங்கம் பகுதியில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸார் விசாரணை நடத்தி, திருவளர்ச் சோலையை சேர்ந்த விக்னேஷ் (35), லால்குடி எசனைகோரையைச் சேர்ந்த அஜய் (23), சரண்ராஜ் (23), ஆனந்த் பாபு (26), திருவளர் சோலையைச் சேர்ந்த மனோஜ் குமார் (19), ரஞ்சித் (27), முருகானந்தம் (27), பிரபாகரன் (24), வினோத் (21) மற்றும் 16, 17 வயது சிறார்கள் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பிரசாத், அப்பு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
Comments are closed.