திருச்சி மாரிஸ் தியேட்டர் அருகே கோட்டை ஸ்டேசன் ரயில்வே மேம்பாலம் கடந்த 1866ம் ஆண்டு கட்டப்பட்டது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தில்லைநகர் மற்றும் உறையூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக சென்று சத்திரம் பேருந்து நிலையத்தை அடைந்தன. இந்த பாலம் கட்டப்பட்டு 157 ஆண்டுகள் கடந்து விட்டதாலும், போக்குவரத்து அதிகரிப்பால் பாலம் வலுவிழந்ததாலும் புதிய பாலம் கட்ட தெற்கு ரயில்வே மற்றும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இணைந்து 50:50 என்ற நிதி பகிர்மான அடிப்படையில் பாலத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.34.10 கோடி மதிப்பில் நகர் ஊரமைப்பு துறையின் உள்கட்டமைப்பு மற்றும் வசதி நிதியின் கீழ் நிதியுதவி பெற்று ரயில்வே நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இத்திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகிறது. புதிதாக கட்டப்படவுள்ள இருவழிபாதை ரயில்வே மேம்பாலம் 31.39 மீட்டர் நீளம், 20.70 மீட்டர் அகலத்தில் அமைகிறது. ரயில்வே பாலத்தின் கிழக்கு பகுதியில் 223.75 மீ. நீளமும், 15.61 மீ. அகலம் கொண்டதாகவும், மேற்கு பகுதியில் 225 மீ.நீளமும், 15.61மீ அகலத்தில் சாலையில் மையத்தடுப்புடன் அமைக்கப்படுகிறது. இப்பாலம் இருவழிப்பாதையாக அமைக்கப்படுவதால் மெயின்கார்டுகேட் பகுதியில் இருந்து தில்லைநகர், தென்னூர், புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகளுக்கு வாகனங்கள் இடையூறின்றி எளிதாக சென்றுவர முடியும். இத்திட்ட பணியானது ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
இந்நிலையில் பாலம் கட்டும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தற்போது வேகத்தை அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பாலத்தின் பக்கவாட்டில், சாலை ரோடு தொடங்கும் பகுதிகளில் இருந்து கூடுதல் மண்ணை அப்புறப்படுத்தி அஸ்திவாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், சாலையின் இருபுறங்களிலும் உள்ள மின் கம்பங்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அவற்றை அப்புறப்படுத்தும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக, மாரிஸ் மேம்பாலம் வழியாக பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ஆகிய வாகனங்கள் சென்று வந்தன. இது, மேம்பால பணிக்கு இடைஞ்சலாக இருப்பதால் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டு மேம்பால பணிகளை விரைவு படுத்த முடிவு செய்யப்பட்டதால் இந்தப் பகுதியில் இன்று(23-03-2024) முதல் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு கோகினூர் தியேட்டர் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. பாலம் விரைவாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டால் நீண்ட காலமாக இருந்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு விடிவு காலம் பிறக்கும்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.