ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ஒருவர், திருச்சியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து ஐ. டி.கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதோடு, திருச்சியில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ.படித்து வருகிறார். சிவகங்கை மாவட்டம், சாலை கிராமத்தைச் சேர்ந்த ஜான்பீட்டர் மகன் வியாகுல நவீன்(22) என்பவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் நேற்று( மே 17)மாலை அண்ணா விளையாட்டு மைதானம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஐ.ஜி.முகாம் அருகிலுள்ள நடைமேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வியாகுல நவீன், கீழே கிடந்த கல்லை எடுத்து காதலியை கொடூரமாக தாக்கி உள்ளார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் கேகே நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காதலன் வியாகுல நவீனை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலியை, காதலன் வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே அவரை கீழே தள்ளி அருகில் கிடந்த கல்லை எடுத்து தலை, முகம் போன்ற இடங்களில் கொடூரமாக தாக்கியது தெரிய வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.