தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக ஜோசப் விஜய், மே 10-ந் தேதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த். ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். ஆட்சி அமைக்க தங்களுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்பட உள்ளது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த 5 எம்எல்ஏக்களில் இருவரை அமைச்சர்களாக தேர்வு செய்வது குறித்து தவெக தலைமை மற்றும் காங்கிரஸ் மேலிடம் இடையே ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதில், கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு முக்கியமான அமைச்சரவைப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு அமைச்சர் பதவிக்காக மேலூர் தொகுதி எம்எல்ஏ விஸ்வநாதன் மற்றும் குளச்சல் தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது. இந்த நிலையில், தவெக அமைச்சரவையில் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் மற்றும் மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதன் ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் 59 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
***

Comments are closed.