தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக சர்வதேச விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் இயங்கி வருகிறது. இங்கிருந்து, சிங்கப்பூர், மலேசியா, துபாய், உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு விமானங்கள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் மே 15ம் தேதி இரவு 10.05 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவை சார்ந்த அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்ததில், அவர் தனது பேக்கில் மறைத்து வைத்து சுமார் 5 கிலோ எடை கொண்ட “”ஹைட்ரோபோனிக் வீட்” எனப்படும் ஹைடெக் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு சம்பந்தப்ட்ட நபரை கைது செய்தனர்.இந்த “ஹைட்ரோபோனிக் வீட்” கஞ்சாவின் சந்தை மதிப்பு 5 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஹைட்ரோபோனிக் வீட் எனப்படும் உயர்தர கஞ்சா என்பது, மண்ணை பயன்படுத்தாமல் தண்ணீரில் ஊட்டச்சத்துக்களை கலந்து வளர்க்கப்படும் ஒருவகை கஞ்சா ஆகும். இது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் அதிக இரசாயனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வளர்க்கப்படுகிறது. சாதாரண கஞ்சாவை விட இது மிகவும் வீரியமிக்கது, மற்றும் அதிக விலைமதிப்புடையது என்பதால், கைது செய்யப்பட்டவரின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார்? இதை யார் இவருக்கு கொடுத்து அனுப்பியது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.