இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகை எம்.பி.யுமான செல்வராஜ்(67) காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மே 2-ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு உயிரிழந்தார். நாகை நாடாளுமன்ற தொகுதியில் இருந்து 1989, 1996, 1998, 2019 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வயது முதிர்வு காரணமாக போட்டியிடவில்லை.
நாளை காலை 10 மணிக்கு செல்வராஜ் எம்பி இறுதிச் சடங்கு சித்தமல்லி கிராமத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னுதாரணமாக திகழ்ந்த தலைமைத்துவம் கொண்ட மக்கள் ஊழியரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இழந்து நிற்கிறது. எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூ.கட்சியின் மாநில குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. எம்.பி. செல்வராஜ்-க்கு மரியாதை செலுத்தும் வகையில் கட்சியினர் செங்கொடியை அரைக் கம்பத்துக்கு இறக்க வேண்டும். தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்காக போராடியவர் மறைந்த செல்வராஜ். காவிரி நதி நீர் பிரச்சனையில் நடுவர் மன்றம் அமைக்க கோரி 110 கி.மீ. மனித சங்கிலி நடத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர். ஓ.என்.ஜி.சி. தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களை அணி திரட்டி தொழிற்சங்கம் அமைத்தவர் செல்வராஜ். தொடர் சிகிச்சையிலும் கட்சிப் பொறுப்பு, மக்கள் பிரதிநிதி என தொகுதிக்குள் சலிப்பறியாது பணியாற்றியவர் செல்வராஜ் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல, அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.