திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ரமேஷ்…!
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சர் காலை உணவு திட்டம், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என பெயர் மாற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை, திருவான்மியூர், காந்திகிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் இன்று(22-09-2026) காலை நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று இந்த திட்டத்தினை தொடங்கி வைத்ததோடு மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தனர். அந்தவகையில் திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்செந்துரையில் உள்ள அரசு பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினருமான ரமேஷ் இந்தத் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் பரிமாறினார். பின்னர் தானும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என தெரிந்து தான் மக்களே அவரை தோற்கடித்துள்ளனர். நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆப்பிளுக்கும், ஆரஞ்சுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தான் திமுகவினர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு அமைச்சர்கள் யார் என்றே தெரியாது, சட்டமன்றத்திற்கு ‘ஆப்சென்ட்’ இல்லாமல் வந்தால் தானே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.