கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்காக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று(07-11-2026) செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஐ மூலம் திமுக ஊழல் செய்துள்ளது. திமுக ஆட்சியில்தான் புத்தகங்கள் வாங்கப்பட்டு, அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. பெரியார் பெயரில் இவ்வளவு பெரிய அநியாயம் செய்துவிட்டு, எங்கள் மீது திமுக அவதூறு பரப்புகிறது. கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்காக அகல் விளக்கு பதிப்பகத்துக்கு பிப்ரவரி 14-ம் தேதி ஆர்டர் கொடுக்கப்பட்டு, 7 நாட்களில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. அகல் விளக்கு பதிப்பகத்தில் புத்தகங்கள் வாங்க திமுக அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. தெம்பு, திராணி இருந்தால் திமுக ஊதுகுழல்கள் மறுக்க முடியுமா? குப்பைகளை விட மோசமான புத்தகங்களை வாங்க திமுக அரசு கொள்முதல் ஆணை வழங்கியுள்ளது. பெரியார் நூலகத்துக்கு நூல்கள் வாங்கியது தொடர்பாக கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 14-ம் தேதி பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை. திமுக ஆட்சியில்தான் புத்தகங்கள் வாங்கப்பட்டன. சென்னை கன்னிமாரா நூலகத்திலும் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான புத்தகங்களை திமுக ஆட்சியில் வாங்கியுள்ளனர். அதில், ஒரு புத்தகத்தின் எழுத்தாளர் பெயர் கமலாம்பாள் கருணாநிதி. அவரை தெரியுமா? மாணவர்களிடம் திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். காலம் ஒருபோதும் திமுகவை மறக்காது; மன்னிக்காது. இது குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும். நூலக கட்டிடப் பணியில் ஊழல் நடந்துள்ளதா என அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா விசாரிக்க வேண்டும். வெளிப்படையாக ஊழல் செய்துவிட்டு, திசை திருப்பும் வேலையில் திமுக ஈடுபட்டு வருகிறது. திமுக விஞ்ஞான ஊழல் செய்துள்ளது என கேள்வி பட்டிருப்போம். ஆனால் தற்போதுதான் பார்க்கிறோம். யாரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது” என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

Comments are closed.