அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி இன்று ( 19.07.2023 ) சந்தித்து பேசினார். சென்னை செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூவில் உள்ள அவரது வீடு உள்பட 7 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கவுதம சிகாமணி ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடியை நேற்று காலையில் இருந்தே சக அமைச்சர்கள், தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர். துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மூர்த்தி, ரகுபதி, சி.வி.கணேசன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா உள்பட அமைச்சர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, அமலாக்கத்துறை நடத்திய விசாரணை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் முதல்-அமைச்சருடன் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சட்டரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சருடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சிகள் கூட்டத்தை முடித்துவிட்டு நேற்று முதல்-அமைச்சர் சென்னை திரும்பிய நிலையில் அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்து பேசியுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.