Rock Fort Times
Online News

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு…!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி
வருபவர் ராஜேஸ்வரி. வழக்கம்போல் பணியில் இருந்த ராஜேஸ்வரி மீது, பிரகாஷ் என்ற நபர் திடீரெனப் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். தீப்பற்றி எரிந்ததில் ராஜேஸ்வரி பலத்த காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக ஊழியர்களும், பொதுமக்களும் தீயை அணைத்தனர். பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். குற்றத்தைச் செய்த பிரகாஷ், சம்பவம் நடந்த உடனே அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். பெண் ஊழியர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய பிரகாஷைப் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் தீவிரத் தேடுதலின் போது, மாதவரம் பகுதியில் பிரகாஷ் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர், பிரகாஷை நாலாபுறமும் சுற்றி வளைத்தனர்.
போலீசாரை பார்த்ததும் பிரகாஷ் தப்பியோட முயன்றதோடு காவல்துறையினரைத் தாக்க முயற்சி செய்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் சிவக்குமார் தற்காப்புக்காகத் தனது துப்பாக்கியால் சுட்டதில், பிரகாஷின் காலில் தோட்டா பாய்ந்தது. இதில் காயம் அடைந்த பிரகாஷைப் பிடித்த காவல்துறையினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜேஸ்வரி மீது அவர் எதற்காக தீ வைத்தார்
என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்