திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் அண்ணா நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் அழகேசன். இவர், கோழிகள் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இவரது அண்ணன் கார்த்திகேயன் (35). சம்பவ தினத்தன்று அழகேசன் வளர்த்து வந்த 3 கோழிகளை அதே பகுதியை சேர்ந்த பிரித்திவிராஜ் (24) என்பவர் திருடி அரசலூர் பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவரிடம் சந்தையில் விற்றதாக கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் கார்த்திகேயன், லாரன்ஸ்ஸிடம் சென்று விசாரித்த போது கோழிகளை சந்தையில் வாங்கியதாகவும், ஆனால் பிரித்திவிராஜியிடம் வாங்கவில்லை என்றும் கூறியுள்ளார். அதனை கார்த்திகேயன் நம்ப மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தெரு வழியாக சென்ற பிரித்திவிராஜை வழிமறித்த கார்த்திகேயன், கோழி திருடியது தொடர்பாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த பிரித்திவிராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரித்திவிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கார்த்திகேயனை வலைவீசி தேடி வருகிறார்.
Comments are closed.