Rock Fort Times
Online News

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்- போதிய பஸ் வசதி இல்லாததால் கடும் அவதி…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமேஸ்வரம், கோவை, திருப்பூர், கரூர், நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பேருந்து நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பயணிகள் குவிந்தனர். மதுரை செல்லும் வழித்தடத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் குறிப்பாக பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருந்தனர். மேலும், மதுரை பேருந்தில் மதுரை செல்லும் பயணிகளைத் தவிர விராலிமலை, துவரங்குறிச்சி, மேலூர், கொட்டாம்பட்டி செல்லும் பயணிகளை பேருந்தில் ஏறுவதற்கு அதிகாரிகள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் அனுமதிக்காததால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால், அரசு பேருந்து நேர காப்பாளரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில்,
மதுரை செல்லும் 1 டூ 1 பேருந்தில் 10 முதல் 15 பயணிகள் மட்டும் தான் செல்கின்றனர்.

 

மதுரை செல்லும் சாதாரண பேருந்துகளில் இடைப்பட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகளை ஏற்றுவதில்லை. இதனால், இரவு நேரத்தில் பல மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆகவே, மதுரை மார்க்கத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்கள், கிடைத்த ஓரிரு பேருந்துகளில் ஏறி நின்று கொண்டே தங்களது ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்