தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவையாக இருக்கும் நிலையில் தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். காரல் மார்க்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ நடந்து முடிந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதிமுக – பாஜக தலைமையிலான சங்பரிவார் அரசியலை வீழ்த்தியுள்ளது. அந்தவகையில் நாங்கள் முன்னெடுத்த முயற்சி வெற்றி பெற்றதாக எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். இதற்காக மக்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம். இடதுசாரிகளுடன் இணைந்து நாங்கள் அரசியல் களத்தில் பயணித்து வருகிறோம். எதிர்காலத்திலும் முக்கிய அரசியல் முடிவுகளை இணைந்தே எடுப்போம். தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் நாங்கள் சிந்திக்கவில்லை; முடிவெடுக்கவில்லை. அரசியலில் அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார்.

Comments are closed.