திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி உமாசந்தியா (38). இவர் அருகில் உள்ள ஜே.கே.நகர் பிரதான சாலையில் டிபன் கடை வைத்து நடத்தி வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து இரு குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவசண்முகம் (45). இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். உமாசந்தியாவின் டிபன் கடைக்கு அடிக்கடி சென்ற வகையில் அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. உமா சந்தியாவை ஆட்டோ டிரைவர் தவறான கண்ணோட்டத்தில் அணுகியதால், இனி கடைப்பக்கம் வரக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சிவசங்கரன், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி உமாசந்தியா தனது மகளுடன் அருகில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்றபோது அவரை வழிமறித்த சிவசங்கரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உமாசந்தியாவை சரமாரியாக குத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து சிவசங்கரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் சிவசங்கரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும், செலுத்த தவறினால் மேலும் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் விமான நிலைய காவல் ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.