Rock Fort Times
Online News

மோடி, அமித்ஷாவால் முதல்வர் ஸ்டாலினை மிரட்டி பணிய வைக்க முடியாது…- துறையூர் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு..!

திருச்சி மாவட்டம், துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத், திமுக வேட்பாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு, கதிரவன், கருணைராஜா, சேலம் ஆத்தூர் வேட்பாளர் அர்த்தநாரி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 18) பங்கேற்று பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. அடிப்படையில் மிக வித்தியாசமான தேர்தல். பாஜக அரசு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அகற்றிவிட்டு, ஒரு பொம்மை முதல்வரை அமர வைக்க முயற்சிக்கிறது. அதிமுக ஒரு சிறந்த கட்சியாக இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறிபோய் பாஜகவின் முகமூடியாக மாறி விட்டது.
தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்க பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழையப் பார்க்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது என்று பாஜகவுக்கு நன்றாக தெரியும். மகளிர் மசோதாவை பயன்படுத்தி தொகுதி மறுவரையறையை கொண்டு வரப் பார்த்தனர். இதன்மூலம் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்று நினைத்தனர். காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அதை தோல்வி அடையச் செய்துள்ளோம். மோடியும், அமித் ஷாவும் தமிழக முதல்வரை மிரட்டலாம் என்று கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. தமிழ்நாட்டுக்கும் எனக்கும் உள்ள உறவை அவர்களால் ஒருபோதும் குலைக்க முடியாது. இது வெறும் அரசியல் உறவு அல்ல. இது அன்பின் உறவு. எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியுடன் என்னையும் தொடரும் பாசப் பிணைப்பு. தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன். நீங்கள் சொல்வதை நான் செய்து முடிப்பேன்” என்று பேசினார். முடிவில் பெரம்பலூர் எம்பி அருண்நேரு நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்