திருத்தம் செய்யப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருச்சியில் நாளை வழக்கறிஞர்கள் பிரம்மாண்ட பேரணி…!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொது பொதுக்கூட்டம் கடந்த ஜூன் 29ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. அதில் புதிதாக வடமொழி தலைப்புடன் சட்டமாக்கப்பட்டுள்ள பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ் ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறுதல் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். அடுத்த கட்டமாக நாளை (08-07-2024) திங்கட்கிழமை திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது. இதுதொடர்பாக திருச்சியில் இன்று திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சியில் நாளை நடைபெறும் வழக்கறிஞர்கள் பேரணியில் மாநிலம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பேரணி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து புறப்பட்டு உழவர் சந்தை மைதானம் வரை நடைபெறும். அங்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் 3 புதிய சட்டம் திருத்தம் தொடர்பாக விவாதம் நடைபெற உள்ளது.அதனை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கான போராட்டம் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. புதிய சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம். அதே சமயத்தில் இந்த சட்டத்தில் உள்ள சில சந்தேகங்களை மத்திய அரசு களைய வேண்டும். இந்தி, சமஸ்கிருதத்தில் உள்ள சட்ட மொழியை மாற்றி ஆங்கில மொழியில் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். பேட்டியின்போது (ஜாக்) பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் சுகுமார், சுதர்சன், முத்துமாரி ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.