திருச்சி பாலக்கரை, மஞ்சனக்காரத்தெருவில் உள்ள செல்வ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 10-ம் தேதி நடக்கிறது…!
திருச்சி பாலக்கரை மஞ்சனக்கார தெரு, ஆட்டுக்கார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் வருகிற 10-ம் தேதி ( திங்கட்கிழமை) நடக்கிறது. கோவில் நகரமாக விளங்கும் திருச்சி மாநகரில், வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளுகின்ற ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ செல்வ காளியம்மன், ஸ்ரீ மதுரைவீரன் ஆகிய சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு பஞ்சவர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு வைகாசி மாதம் 28ம் தேதி (10-06-2024) திங்கட்கிழமை காலை 6-30 மணிக்கு மேல் 7-30 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக, 8-ம் தேதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவையும், காலை 8-30 மணிக்கு தீர்த்த குடம் எடுத்து வருதலும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜை மற்றும் விக்னேஸ்வர பூஜை, அங்குரார்பணம், ரஷாபந்தனம், கும்ப அலங்காரம் போன்ற பூஜைகளும் நடக்கின்றன. 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், விசேஷ சாந்தி, விக்னேஸ்வர பூஜை, யாக பூஜை ஆரம்பம், திரவிய குதி, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவையும், மதியம் விமான கலஸ்த தாபனம், எந்திர பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் ஆகியவையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால பூஜைகளும், சுமங்கலி பூஜை, பிர்மசாரி பூஜை, வடுக பூஜை, தம்பதி பூஜை போன்ற பூஜைகளும் நடக்கின்றன. 10ம் தேதி திங்கட்கிழமை காலை 4 மணி முதல் 6 மணி வரை நான்காம் கால யாக பூஜைகளும் நடக்கின்றன. அதனைத் தொடர்ந்து காலை 6-30 மணிக்கு மேல் 7 மணிக்கு கடம் புறப்பாடு, விமான கும்பாபிஷேகமும், 7 மணிக்கு மேல் 7-30 மணிக்குள் மூலஸ்தான கும்பாபிஷேகம், பிரசாதம் வழங்குதல் ஆகியவையும் நடக்கின்றன. அதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு அபிஷேகமும், 10 மணிக்கு அன்னதானமும் நடக்கின்றன. 11ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் மண்டலாபிஷேகம் ஆரம்பமாகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed.