காங்கிரஸ் இன்னும் 40 இடங்களில் வெற்றி பெற்று இருந்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைநீட்டும் நபர்தான் பிரதமராக இருந்திருப்பார்- அமைச்சர் கே.என்.நேரு…!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் முன்னாள் முதல்வர்
மு.கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் திருச்சி, கோட்டை கீழரண் சாலை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் பாபு தலைமை வகித்தார். வட்டச் செயலாளர்கள் மனோகரன், சுப்பிரமணி ஆகியோர் வரவேற்றனர். திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். கூட்டத்தில், அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், அதிக வாக்குகளை பெற்று தரும் மாவட்ட செயலாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தந்துள்ளார். அந்த அடிப்படையில் அவருக்கு 10 பவுன் தங்க சங்கிலி அணிவிக்கப்படும். அவர் “மைனர்” போன்று இருப்பதால் அவருக்கு மைனர் செயின் அணிவிக்கப்படும் எனக் கூறியதும் சிரிப்பொலி எழுந்தது. திருச்சி கிழக்கு தொகுதியும் திமுகவிற்கு அதிக வாக்குகளை பெற்று தந்துள்ளது. அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். முன்னாள் முதல்வர்களும், திமுக தலைவர்களுமான அண்ணா, மு.கருணாநிதி உள்ளிட்டோரால் வளர்ந்துள்ள இயக்கம் திமுக. அதன் வரலாற்றில் திமுக தனியாக தேர்தலில் நிற்பது தொடங்கி பல்வேறு முக்கிய முடிவுகள் திருச்சியில்தான் எடுக்கப்பட்டு அவை வெற்றியும் பெற்றுள்ளன என்பது அனைவரும் அறிந்தது என்றாலும் அதை நினைவு படுத்த வேண்டியுள்ளது. அந்தவகையில் தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும், திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி, திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று அதிக வாக்குகளையும் பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல தற்போது நமது நாட்டின் பிரதமரை நியமிக்கும் முக்கியத்துவம் உள்ள தலைவராக வளர்ந்துள்ளார். அவரது தந்தையார்கூட 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்குப் பின்னரே அந்த தகுதியை பெற்றார். ஆனால் இவரோ 3 ஆண்டுகளிலேயே அந்த தகுதியை பெற்று நாடு போற்றும் தலைவராக உருவெடுத்துள்ளார். காங்கிரஸ் இன்னும் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் முதல்வர் மு.க ஸ்டாலின் கை காட்டும் நபரே பிரதமராகி இருப்பார் என்று பேசினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளில் திருச்சி தெற்கு மாவட்டம் கூடுதலாக வாக்குகளை பெற்றுள்ளது. வெற்றி பெற்ற திமுக எம்பிக்களில் அமைச்சரின் மகன் அருண் நேரு, சுமார் 3.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்களில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார். அதுபோல திருச்சியில் 3 மாவட்ட வேட்பாளர்கள் வெற்றியும் முதன்மைச் செயலாளருக்கு கிடைத்த வெற்றி. அவரது வெற்றி தமிழக முதல்வர் மற்றும் இளைஞரணிச் செயலாளர் ஆகியோரின் வெற்றியாகும். இந்த வெற்றிக்காக உழைத்திட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், செந்தில், திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாநகர துணைச் செயலாளர் சந்திரமோகன், ராஜேஸ்வரன், மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா, பகுதி செயலாளர்கள் மருந்து கடை மோகன், கொட்டப்பட்டு தர்மராஜ், ஏ.எம்.ஜி விஜயகுமார், மணிவேல், சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் கே.கே.கார்த்திக் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
*
Comments are closed.